Sunday, May 23, 2010

உதிராச் சருகுகள்

கொடைக்கானல் பிரயன்ட் பூங்கா. மாலை நேரம். மலர்க் கண்காட்சி என்பதால் கூட்டத்திற்குப் பஞ்சம் இல்லை. எண்ணற்ற கண்கள் பூக்களை ஆச்சர்யத்துடன் நோக்கிக் கொண்டிருக்கையில், நான்கு கண்கள் மட்டும், கூட்டம் அதிகமில்லா இடத்தைத் தேடின. இவர்களுக்கெனத் தவம் கொண்டதாய் ஒரு மரம் கரங்கள் நீட்டி அழைத்தது. அம்மரத்தின் அருகே 3 குழந்தைகள் மட்டுமே பந்து விளையாடிக் கொண்டிருந்தன. பேசிக் கொள்ளவில்லை. இருவர் கால்களும் தானாய் அம்மரத்தை நோக்கி ஒரு சேர நடந்தன. அகன்ற புன்னகை இருவர் முகத்திலும். ஆயினும், அவர்கள் உள்ளங்களில் பரவிய ஆனந்தத்தை, விளக்க முயன்று தோற்றுப் போயின முகங்கள் என்பதே உண்மை.

இருவரும், புல் மீது அமர்ந்த உடனே, சுற்றும் முற்றும் இருந்தவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தனர். மனதினுள் ஆயிரம் ஓட்டங்கள். குழந்தையை ஒத்த மனநிலையில் இருவரும். இறுதியாக, ஒருவரை ஒருவர் நோக்கினர். ஆரம்பிக்கலாமா என இருவர் விழிகளும் வினவியது. ஆகட்டும் என்று அதே விழிகள் பதிலும் அளித்தன. உடனே, அவன் சட்டைப் பையினுள் கை விட்டு, வெளியே எடுத்தான் மோதிரத்தை. புன்னகை இருவரை விட்டு, அன்று முழுவதும் விலகுவதில்லை என முடிவெடுத்திருந்தது. அதற்காகவே காத்திருந்தவள் போல், கையை நீட்டினாள், அவன் பெருமிதத்துடன் அணிவித்தான். மிருதுவாய் முத்தமிட்டாள், அம்மோதிரத்தை. அவன் அன்று தான் உணர்ந்தான், நிரம்பிய சந்தோஷம் என்றால் என்னவென்று.

இன்னும் மௌனமும், சிரிப்பும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன இருவரிடையில். நேரம் ஆனதை உணர்ந்து அவ்விடத்தைப் பிரிந்தும், பிரியாமலும் நகர்ந்தனர் இருவரும்.

அடுத்து எங்கே எனக் கேள்வியே எழவில்லை. ஏற்கனவே பேசிக் கொண்டார்களோ, என்ன செய்யவேண்டும் என்று என எண்ண வைத்தது. பூங்கா விட்டு வெளியேறியவுடன், "கொடை லேக்" நோக்கி நடந்தனர். இருவர் மட்டும் செல்லக் கூடிய படகில் ஏறிக் கொண்டனர். இருவரும் படகை தங்களால் இயன்ற வேகத்துடன் மிதித்துக் கொண்டிருந்தனர். ஏரியின் நடுவே வந்ததும், கால்கள் படகை மிதிக்க மறந்தன. தங்களுக்காய் மீதம் இருக்கும் கணங்கள் அனைத்தும் அங்கேயே கரைந்து விடாதோ என்ற ஏக்கம் இருவர் உள்ளங்களில். முன்னேறிச் செல்ல விருப்பமில்லை. வந்த வழியே திரும்பவும் மனமில்லை. தன் கன்னத்தில் கை வைத்தபடி, எதிரே இருந்த படகில், பள்ளிச் சிறுமியர் போடும் அட்டகாசத்தை ஆர்வமாய் அவள் நோக்குகையில், அவன் பார்வையோ அவள் முகத்தின் மீது மட்டுமே. சட்டென, அவள் அவன் பக்கம் திரும்பினாள். மாட்டிக் கொண்ட கள்வனைப் போல், வேறு பக்கம் பார்த்து முகம் மலர்ந்த தன்னவனைக் கண்ட பெண்ணின் வெட்கத்தை விளக்கவும் வேணுமோ?

கரைக்குத் திரும்பிய உடன், பெரிதும் களைப்புற்றவராய், அன்றைக்கு வாழ்வை முழுதுமாய் வாழ்ந்த மனநிறைவுடன் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் நோக்கி நடை போட ஆரம்பித்தனர்.

ஹோட்டல் அறையினுள் நுழைந்த அவர்களிடம்,

"எங்கே போனீங்க ரெண்டு பேரும்? அம்மா, அப்பா கூட தெரியல னு சொல்லிட்டாங்க. எனக்கு விளையாட ஆளே இல்லை. சரி விடுங்க... வாங்க பார்க் போகலாம் "

என்ற நான்கு வயது பேத்தியை அணைத்தபடி, மீண்டும் நடந்தனர் பிரயன்ட் பார்க் வழியில்.

அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாய் எதிர்கொண்ட போராட்டங்கள், அனுபவித்த சந்தோஷங்கள், எதிர்பட்ட பிரச்சனைகள், நிறைவேற்றிய கடமைகள் அனைத்தும், அவர்கள் காதலை மெருகேற்றி இருந்தது. அன்று கொண்ட ஆனந்தத்தை விட இன்று மீண்டும் வாழ்ந்த அதே நொடிகள் உண்டாக்கிய நிறைவு மனம் முழுவதும் வாசம் பரப்பியது.

5 comments:

  1. உங்கள் ஆக்கங்கள் மிகவும் நன்று. உங்கள் திறமைகள் இன்னும் வளர வேண்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் ஆக்கங்களை எமக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் வளர்ச்சிக்கு துணை புரிய ஆர்வமாய் உள்ளோம்.

    என்றும் அன்புட‌ன் உங்க‌ள்

    ச‌ர்வ‌ம் FM
    உல‌கத்த‌மிழர் அனைத்தூட‌க வானொலி நிலைய‌ம்.

    "த‌ர‌ணியை வென்றிடுவோம் இசையால்"

    www.sarvamfm.com
    info@sarvamfm.com

    ReplyDelete
  2. ஹேய்...!
    நல்லா இருக்குபா..!
    நான் கூட ஏதோ இளன்ஜோடி காதல் தோல்வில தற்கொலை செய்ய போறாங்களோனு நெனச்சேன்...( நம்ம மண்டைக்கு அவ்ளோதான் சிந்திக்க வருது)

    :) :)

    ஆனா பாருங்க கடைசில கலக்கீடீங்க...!
    தொப்பிகளை தாழ்த்துகிறோம்(HATS OFF) சந்கீதாவிர்க்காக..! :) :)

    ReplyDelete
  3. Liked this the best. Very sweet. But seeing a pattern though :)

    ReplyDelete
  4. அட!!!! கதையல்ல ......இது கவிதை :)

    ReplyDelete
  5. Brilliant post. Was reading all your blog posts. Unga stories la iruka ethartham enaku rhomba pudichu iruku. Keep writing!

    ReplyDelete