Thursday, October 27, 2011

புன்னகைப் பூவே

கடவுளை என்றாவது யாராவது உணர்ந்ததுண்டா? இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்! முடியக் கூடியதும் இல்லை. சுற்றி நடக்கும், அநியாயங்களும், உளைச்சல்களும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியையும், மழை,கடல்,இயற்கை என அனைத்தும் எல்லையை மீறிய ஒரு சக்தியையும் மாறி மாறி உணர்த்திக் கொண்டே இருக்கும்!

அது ஒரு புறம் இருப்பினும், கடவுளை உணர்ந்த நொடிகள் என்று பல உண்டு. ஒரு புன்னகை, சிறு துளி கண்ணீர், முகமலர்ச்சி, கோபம்,நன்றி,மன்னிப்பு என பலவற்றை தினமும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் மட்டும், அதே புன்னகை,கண்ணீர் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணலாம்! அத்தகைய மனதிற்கு நெருக்கமான தருணங்களை என்னவென்று விவரிப்பது!

அன்று, மிகுந்த குழப்பமான மனநிலையில் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். ப்ளேயரில் இளையராஜா பாடிக் கொண்டிருந்தாலும், மனக்குழப்பத்தில் மட்டும் மாற்றமில்லை! எங்கே நடக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லை!

திடீரென எதிரே முதுகில் பையை மாட்டிக் கொண்டு ஒரு சிறு பெண் வழி மறித்து நின்றாள். கையை சல்யுட் போல நெற்றியில் வைத்தவாறே, "அக்கா. எங்க பாத்து நடக்கறீங்க? குட் ஈவினீங்" என்றாள் முகம் நிறைய புன்னகையுடன்! என்னிடம் தான் பேசுகிறாளா? இவளை முன்னமே பார்த்திருக்கிறேனா? எதற்கு என்னை நிறுத்தினாள்? ஏன் என்னிடம், அவள் பேசினாள்? தினம் செல்லும் வழி தானே. கபடமில்லா சிரிப்பும், குட் ஈவினிங் வாழ்த்தும் ஏன் என் மீது அன்று வீசுகிறாள் ? அந்த புன்னகை, என் இதய ஆழமுள் வரை சென்று,ஏன் உற்சாகத்தை பரப்பியது? பதிலுக்கு கூட அவள் காத்திருக்கவில்லை.நகர்ந்து நடந்து கொண்டே இருந்தாள். சில கணங்கள் என்ன பதில் அளிக்க வேண்டும் என்று அறியாமல் அங்கேயே நின்ற நான், திரும்பி "ஓய். குட் ஈவினிங்" என்றேன் கை அசைத்தவாறு. புன்னகை மட்டுமே பதில் அளித்து மறைந்தாள் இருட்டில்!

அவள் முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. புன்னகை தந்த நொடிகள் மட்டும் நிறைந்திருக்கிறது நினைவுகளில். இந்த தருணம் என்ன உணர்த்தியது எனக்கு? அன்பு தான் கடவுளா? அன்பின் வழியே கடவுள் வெளிப்படுகிறாரா? ஒரு சிறு புன்னகை கூட மனதை இப்படி மாற்றுவதன் அதிசயமும் ரகசியமும் என்ன! அனைத்து கேள்விகளும் எழுந்தாலும், பதில் தேவையிருக்கவில்லை! நான் தான் மீண்டும் புதியதாய் பிறந்தது போல், பாடிக் கொண்டு நடந்தேனே தொடர்ந்து! எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற தெளிவு பிறந்தது ஆச்சரியமே! நீங்களும் இத்தகைய மனதை விட்டு அகலா தருணங்கள் வாழ்ந்துள்ளீர்கள் தானே!

Thursday, October 20, 2011

பிரிந்தும் பிரியாமலும்-1

வாரயிறுதிகள் வீணாய்க் கழிவதை விரும்பாமல் தான்,நண்பர்களுடன், அந்த இல்லம் போக ஆரம்பித்தேன்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியிலும், மனதளவிலும் உறுதுணையாய், முடிந்த உதவியை செய்திட ஒன்றிணைந்தோம்.புதிய அனுபவம் கண் முன் உனக்காகவே காத்திருக்கிறேன் என்று வரவேற்றது!

முதல்
நாள். எங்களின் முன் குறைந்தது நாற்பது மாணவர்கள்! எதற்காக நாங்கள் அவர்களை சந்திக்கிறோம் என்ற குழப்பம் அவர்களிடம். இவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எங்களிடம்!ஆர்வம் மட்டுமே துணையாய்!

இது வரை, யாரோ என்றிருந்தவர்கள் இனிமேல், அக்கா - தம்பி, அண்ணா- தம்பி என்ற உறவுகளாய் இணையப் போகிறோம். எளிதில் எங்களிடம் பேசி விடுவார்களா? புதியவர்களிடம், தயக்கம் இருந்திடாதா?அதை தகர்த்தெறிவது எங்களின் பொறுப்பு தானே. விளையாட்டைத் தவிர வேறு வழி இருக்குமா உறவுப் பாலத்தை உறுதியாக்கிட. தொடர்ந்து சில வாரங்கள், அவர்களுடன் விளையாட்டு மட்டுமே என்று ஆரம்பித்தோம்.

இதோ எனது வாழ்க்கை பயணத்தில், புதிதாய் பல அரும்புகள் ஒரே சமயத்தில். உற்சாகமா,நிறைவா விளக்க முடியவில்லை.வாழ்ந்தேன் அந்த நொடிகளை என்பது மட்டும் நிச்சயம்.

ஒவ்வொரு விளையாட்டும் மெல்ல அவர்களை அறிமுகப் படுத்தியது.விருப்பங்கள், ஆசைகள், ஏக்கங்கள் என அனைத்தும் உணர ஆரம்பித்தோம். அத்தகைய ஒரு விளையாட்டின் போது தான், அவனின் அறிமுகம் எனக்கு. பெயர் முதலில் மனதில் நிற்கவில்லை தான். ஆனால் பார்க்கும் போதெல்லாம் புன்னகை வீசிட மட்டும் தவறவில்லை. நினைவை விட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து அவனிடம் தனி கவனம் என்னையறியாமல் சென்றது. அனைத்து விளையாட்டிலும் சுற்றி இருந்த பல மாணவர்களின் நடுவிலும், அவன் எங்கு உள்ளான் என்று தேட ஆரம்பித்தேன். அவனும் பார்த்து முகம் மலர்ந்தான்.

எல்லோரும் அக்கா என்று பாசத்துடன் அழைத்த சமயம், இவன் மட்டும் "சங்கீதா அக்கா" என்று எனது பேரயும் இணைத்தான். நெருக்கம் அதிகமாய் உணர்ந்தேன். இதோ கிடைத்து விட்டான் ஒரு அன்புத் தம்பி , ஆனந்தம் எனக்குள்.

கவிதைப் போட்டி வைத்த ஒரு நாள்."வாழ்க்கையின் குறிக்கோள்" என்ற தலைப்பில். எல்லோரும், மிலிட்டரியில் சேர வேண்டும், நாட்டிற்கு செய்ய வேண்டியவை என பட்டியலிட்டுக் கொண்டிருந்த வேளையில், இவன் மட்டும் மாறுபட்டான். என் வாழ்க்கையில், கேளாமலே நடந்திட்ட பலவும், அவனின் விருப்பங்களாய் நீண்டு கொண்டிருந்தது. சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை,ஆயினும் மனதில் ஆழமாய் பதிந்திட்ட குறிக்கோளாய் அவனுள். ரசிக்க வைத்தான், யதார்த்த ஆசையை.

ஒரு சமயம்,கலை மற்றும் விளையாட்டு நிகழ்சிக்காக, அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றேன். அதிகாலை நான் சென்ற சமயம், உற்சாகமாய் என்னுடன் கிளம்பிட அனைவரும். எங்களை அழைத்துச் செல்லும் பேருந்து மட்டும் இன்னும் காணவில்லை. வருத்தம் தான். அதிலும் ஒரு நன்மையே. அவர்களுடன் உரையாடி மகிழ அதை விட சிறந்த சமயம் கிடைத்திருக்காது. முடிவில்லா கேள்விகள் அவர்களிடம். முடிந்த வரை பதில் அளித்திட நான் அவர்கள் முன்.

"அக்கா. பஸ் எப்போ வரும்?" என்ற கேள்வி தொடர்ச்சியாய் இருந்தாலும், பல உண்மைகளை உணர்த்திட்ட கேள்விகளும், பதில்களும் இருந்தன. நம் அன்புத் தம்பி அருகில் அமர்ந்தேன்.

"அக்கா. என்ன பண்ணுறீங்க?" அவனே ஆரம்பித்தான் உரையாடலை.

"சாப்ட்வேர் இஞ்சினீயர்" என்றேன்.

"அப்படியா? எவ்வளோ அக்கா சம்பளம் இருக்கும்?" அடுத்த கேள்வியும் தம்பியே.
இதற்கு என்ன பதில் சொல்லுவேன் என்று யோசித்த சமயம், இன்னொருவன் கூறினான் "40000 இருக்கும்டா". சிரித்தேன். தம்பியை கவனித்தேன். "அப்படியா அக்கா?" என்ற ஆச்சரியம்.

"எதுக்கு கேக்கற" என்றேன்.

"இல்ல அக்கா. நானும் உங்கள மாதிரி சம்பாதிக்கணும்"

"கண்டிப்பா சம்பாதிப்படா" . புன்னகையுடன் ஆமோதித்தான்.

"அதோ தெரியுதே. அந்த காலேஜ்ல படிச்சா போதும் அக்கா"

"ம்ம்ம்"

"ஆமா.இப்போ எவ்வளோ தூரம் போகணும்?"

"கொஞ்ச நேரம் தான்டா ஆகும். இருபது நிமிஷம்"

"ம்ம்ம்.எங்கயும் நாங்க வெளில போகவே முடியாதுக்கா"

"இன்னிக்கு கூட்டிட்டு போறேனே. நல்லா ஜாலியா இருங்க"

"அது மட்டுமென்ன, ஒரு பெரிய மைதானம். அவ்வளோ தான?"

"ஆமா.ஆனால் யாரும் உங்களை கேள்வி கேக்க மாட்டாங்க"

"நான் வெளில போய் இருக்கேன். பக்கத்து தெருல குப்பைத்தொட்டில குப்பை கொட்டிட்டு வர. அத தாண்டி போனதில்லை" என்றான் வேறொருவன்

"நான் அது கூட போனதில்ல அக்கா" என்றான் தம்பி.

"ஆமா. உங்க வாத்தியார் பத்தி சொல்லுடா" பதில் தெரியாத நேரங்களில், இன்னொரு கேள்வியே பதிலாய்.

அவனும் கண்டிப்பான சார் யாரென்றும், பரிவுடன் பழகும் சார் பத்தியும் பேச ஆரம்பித்தான், வகுப்பறை அனுபவங்களை. எல்லோரும் சேர்ந்து கொண்டனர்.காலை எழுந்ததிலிருந்து,இரவு தூங்கும் வரை,அவர்களின் தினசரி செயல்கள்,வாழ்க்கை முறை என அனைத்தும் அறிந்தேன். பேச்சை மாற்றிய பெருமிதம் என்னிடம். நிலைக்கவில்லை.

இடையில் கேள்வியுடன் ஒருவன் குறுக்கிட்டான். "அக்கா. பீச் போய் இருக்கீங்களா? IPL மேட்ச் ஸ்டேடியம்ல பாத்து இருக்கீங்களா"

மறுக்க முடியவில்லை. "பாத்திருக்கேன்டா. ஒரு நாள் உங்கள கூட்டிட்டு போறேன்"

ஏதோ யோசித்துக் கொண்டிருந்த தம்பி "சங்கீதா அக்கா, நீங்க பண்ணுறதுக்கு பேர் என்ன? சோஷியல் சர்வீசா?" என்றான். யாரோ தலையில் கொட்டுவதைப் போல் உணர்ந்தேன். இதற்குப் பெயர் சோஷியல் சர்வீஸ் இல்லையே. எனது சுயநலம் தானே அதிகம் இருந்தது. இவர்களின் புன்னகை வழியே எனது புன்னகையையும்,மன நிம்மதியையும் தானே எதிர்பார்க்கிறேன்.நாம் செய்யும் எந்த செயலிலும்,கூறும் எந்த ஒரு வார்த்தையிலும் எவ்வளவு சுயநலம் ஒளிந்துள்ளது.

"அதெல்லாம் இல்லடா. எனக்கு சனி,ஞாயிறுல எதுவும் அவ்வளவா வேலை இல்லை. அதான் உங்க கூட வந்து பேசலாம்ன்னு இருக்கேன்"

என் பதிலை அவன் எதிர்பார்த்து கேள்வி கேட்டானா என்று தெரியவில்லை.முந்தைய ஆண்டு, இதே மாதிரி அவர்கள் போட்டியில் பங்கேற்று பெற்ற பரிசுகள் பற்றி உற்சாகமாய் உரையாட ஆரம்பித்தனர். அவன் இந்த வருடமும் எப்படியாவது சாம்பியன்ஷிப் தங்களுக்கு தான் என்று அங்கேயே தீர்மானம் நிறைவேற்றினர். தம்பியும், அன்றைய தினம்,அவன் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு, நடனப் போட்டி பற்றி விவரித்தான். "நீங்க அங்க தான இருப்பீங்க அக்கா. கண்டிப்பா வந்து பாக்கணும்." அன்புக் கட்டளை தம்பியிடமிருந்து. பேருந்து வந்தடைந்தது.

தொடரும்...