Thursday, June 10, 2010

கரையைத் தேடி...

சமீபத்தில் தான் வீடு மாறி இருந்தார்கள். விலாசம் மாற்ற வேண்டியதில் ஏதோ ஒரு குழப்பம். அதனால் வங்கி வரை நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு. ஒன்றரை வயது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருந்தாள்.

பெரிய படிப்பு இல்லையெனினும் நன்றாகப் படித்தவள் தான். வீட்டோடு இருந்தால் தான், குழந்தை வளர்ப்பில் முழு கவனம் செலுத்த முடியும் என்பது அவள் கணவனின் விருப்பம். ஒப்புக் கொண்டு தான் மணம் முடித்தாள்.ஆயினும்,
அவ்வப்போது, வேலைக்குச் செல்லும் பெண்களைக் காண்கையில், மனதில் ஒரு வித நெருடல் வரும். அவர்கள் நம்பிக்கையுடன் எதையும் அணுகும் திறன் தன்னிடம் குறைவாகவே இருப்பதாய் உணர்வாள். வீட்டில் இருப்பதால் தான், வேலை பளு அதிகம் தன் மேல் விழுவதாய்க் கூட சில சமயம் தனக்குள் நொந்து கொள்வாள்.

அந்த எண்ணம் இன்றும் , பெண் மேலதிகாரியிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் இவளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. இடையிடையே தன் மகள் பேச நினைக்கும் புரியா வார்த்தைகளுக்கு பதில் அளிப்பதுமாய் இருந்தாள்.

விலாசம் மாற்ற வேண்டி ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே சமயம், இவளின் முழு கவனமும், அந்தப் பெண் அதிகாரியின் மீதே. தன் கீழ் வேலை செய்பவர்களிடம் செலுத்தும் கண்டிப்பு, வாடிக்கையாளர்களிடம், நேரிலோ, தொலைபேசியிலோ, அமைதியாய், புன்முறுவலுடன் பதில் அளிக்கும் முறை என அனைத்தும், இவளைப் பொறாமை கொள்ளவே செய்தது. தானும் அப்படி ஒரு நிலைமையில், இருக்கக் கூடாதா என. இதே எண்ணங்களுடன் வங்கியை விட்டு தன்னையே மறந்தவளாய்க் குழந்தையுடன் வெளி ஏறினாள்.

இவள் இறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த, அதிகாரியின் கண்களில் ஏக்கமும் பொறாமையும். பெற்றோரின் நினைப்பில் அவ்வதிகாரியின் குழந்தையும் "டே கேர்" மையத்தில். இவள் தன் பிஞ்சின் மழலையை, மடியில் அமர்த்தி மகிழ்வது எப்போது.

8 comments:

  1. :) "கரைகள் எங்கோ இருக்க, நடுக்கடலின் மிதந்தாடும் ஒற்றைக்கப்பலைத் தேடி" இது சரியா வருமோ தலைப்புக்கு?

    ReplyDelete
  2. இய‌ல்பான‌ எழுத்து..

    ReplyDelete
  3. கரையைத் தேடி....ஒருவரை தனக்கு வழிகாட்டியாகப் பின்பற்றி வாழ்வில் உயர நினைக்கும் ஒரு பெண்ணின் செயற்பாடுகளைச் சுட்டும் ஒரு குறுங் கதையாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  4. @நிரூபன் நான் கூற நினைத்தது அது அல்ல :) பெண்கள் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொள்வது அவர்களுக்கு சந்தோஷமா அல்லது வேலைக்குச் செல்வது சந்தோஷமா என்ற விடை தெரிய கேள்வியை முன்வைக்கவே இந்த கதை :)

    ReplyDelete
  5. பெண்கள் வேலைக்குப்போகவே விரும்புகிறார்கள், ஆனால் ஆண்கள் பெண்கள் வீட்டில் இருந்தாலே போதும் என நினைக்கிறார்கள், அதே சமயத்தில் மனைவி மூலம் வரும் சம்பளப்பணத்தையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை.. இதுதான் நடை முறை

    ReplyDelete
  6. Good thought provoking one & free flow writing. Kudos....

    ReplyDelete