Thursday, June 10, 2010

கரையைத் தேடி...

சமீபத்தில் தான் வீடு மாறி இருந்தார்கள். விலாசம் மாற்ற வேண்டியதில் ஏதோ ஒரு குழப்பம். அதனால் வங்கி வரை நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு. ஒன்றரை வயது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருந்தாள்.

பெரிய படிப்பு இல்லையெனினும் நன்றாகப் படித்தவள் தான். வீட்டோடு இருந்தால் தான், குழந்தை வளர்ப்பில் முழு கவனம் செலுத்த முடியும் என்பது அவள் கணவனின் விருப்பம். ஒப்புக் கொண்டு தான் மணம் முடித்தாள்.ஆயினும்,
அவ்வப்போது, வேலைக்குச் செல்லும் பெண்களைக் காண்கையில், மனதில் ஒரு வித நெருடல் வரும். அவர்கள் நம்பிக்கையுடன் எதையும் அணுகும் திறன் தன்னிடம் குறைவாகவே இருப்பதாய் உணர்வாள். வீட்டில் இருப்பதால் தான், வேலை பளு அதிகம் தன் மேல் விழுவதாய்க் கூட சில சமயம் தனக்குள் நொந்து கொள்வாள்.

அந்த எண்ணம் இன்றும் , பெண் மேலதிகாரியிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் இவளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. இடையிடையே தன் மகள் பேச நினைக்கும் புரியா வார்த்தைகளுக்கு பதில் அளிப்பதுமாய் இருந்தாள்.

விலாசம் மாற்ற வேண்டி ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே சமயம், இவளின் முழு கவனமும், அந்தப் பெண் அதிகாரியின் மீதே. தன் கீழ் வேலை செய்பவர்களிடம் செலுத்தும் கண்டிப்பு, வாடிக்கையாளர்களிடம், நேரிலோ, தொலைபேசியிலோ, அமைதியாய், புன்முறுவலுடன் பதில் அளிக்கும் முறை என அனைத்தும், இவளைப் பொறாமை கொள்ளவே செய்தது. தானும் அப்படி ஒரு நிலைமையில், இருக்கக் கூடாதா என. இதே எண்ணங்களுடன் வங்கியை விட்டு தன்னையே மறந்தவளாய்க் குழந்தையுடன் வெளி ஏறினாள்.

இவள் இறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த, அதிகாரியின் கண்களில் ஏக்கமும் பொறாமையும். பெற்றோரின் நினைப்பில் அவ்வதிகாரியின் குழந்தையும் "டே கேர்" மையத்தில். இவள் தன் பிஞ்சின் மழலையை, மடியில் அமர்த்தி மகிழ்வது எப்போது.

Sunday, May 23, 2010

உதிராச் சருகுகள்

கொடைக்கானல் பிரயன்ட் பூங்கா. மாலை நேரம். மலர்க் கண்காட்சி என்பதால் கூட்டத்திற்குப் பஞ்சம் இல்லை. எண்ணற்ற கண்கள் பூக்களை ஆச்சர்யத்துடன் நோக்கிக் கொண்டிருக்கையில், நான்கு கண்கள் மட்டும், கூட்டம் அதிகமில்லா இடத்தைத் தேடின. இவர்களுக்கெனத் தவம் கொண்டதாய் ஒரு மரம் கரங்கள் நீட்டி அழைத்தது. அம்மரத்தின் அருகே 3 குழந்தைகள் மட்டுமே பந்து விளையாடிக் கொண்டிருந்தன. பேசிக் கொள்ளவில்லை. இருவர் கால்களும் தானாய் அம்மரத்தை நோக்கி ஒரு சேர நடந்தன. அகன்ற புன்னகை இருவர் முகத்திலும். ஆயினும், அவர்கள் உள்ளங்களில் பரவிய ஆனந்தத்தை, விளக்க முயன்று தோற்றுப் போயின முகங்கள் என்பதே உண்மை.

இருவரும், புல் மீது அமர்ந்த உடனே, சுற்றும் முற்றும் இருந்தவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தனர். மனதினுள் ஆயிரம் ஓட்டங்கள். குழந்தையை ஒத்த மனநிலையில் இருவரும். இறுதியாக, ஒருவரை ஒருவர் நோக்கினர். ஆரம்பிக்கலாமா என இருவர் விழிகளும் வினவியது. ஆகட்டும் என்று அதே விழிகள் பதிலும் அளித்தன. உடனே, அவன் சட்டைப் பையினுள் கை விட்டு, வெளியே எடுத்தான் மோதிரத்தை. புன்னகை இருவரை விட்டு, அன்று முழுவதும் விலகுவதில்லை என முடிவெடுத்திருந்தது. அதற்காகவே காத்திருந்தவள் போல், கையை நீட்டினாள், அவன் பெருமிதத்துடன் அணிவித்தான். மிருதுவாய் முத்தமிட்டாள், அம்மோதிரத்தை. அவன் அன்று தான் உணர்ந்தான், நிரம்பிய சந்தோஷம் என்றால் என்னவென்று.

இன்னும் மௌனமும், சிரிப்பும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன இருவரிடையில். நேரம் ஆனதை உணர்ந்து அவ்விடத்தைப் பிரிந்தும், பிரியாமலும் நகர்ந்தனர் இருவரும்.

அடுத்து எங்கே எனக் கேள்வியே எழவில்லை. ஏற்கனவே பேசிக் கொண்டார்களோ, என்ன செய்யவேண்டும் என்று என எண்ண வைத்தது. பூங்கா விட்டு வெளியேறியவுடன், "கொடை லேக்" நோக்கி நடந்தனர். இருவர் மட்டும் செல்லக் கூடிய படகில் ஏறிக் கொண்டனர். இருவரும் படகை தங்களால் இயன்ற வேகத்துடன் மிதித்துக் கொண்டிருந்தனர். ஏரியின் நடுவே வந்ததும், கால்கள் படகை மிதிக்க மறந்தன. தங்களுக்காய் மீதம் இருக்கும் கணங்கள் அனைத்தும் அங்கேயே கரைந்து விடாதோ என்ற ஏக்கம் இருவர் உள்ளங்களில். முன்னேறிச் செல்ல விருப்பமில்லை. வந்த வழியே திரும்பவும் மனமில்லை. தன் கன்னத்தில் கை வைத்தபடி, எதிரே இருந்த படகில், பள்ளிச் சிறுமியர் போடும் அட்டகாசத்தை ஆர்வமாய் அவள் நோக்குகையில், அவன் பார்வையோ அவள் முகத்தின் மீது மட்டுமே. சட்டென, அவள் அவன் பக்கம் திரும்பினாள். மாட்டிக் கொண்ட கள்வனைப் போல், வேறு பக்கம் பார்த்து முகம் மலர்ந்த தன்னவனைக் கண்ட பெண்ணின் வெட்கத்தை விளக்கவும் வேணுமோ?

கரைக்குத் திரும்பிய உடன், பெரிதும் களைப்புற்றவராய், அன்றைக்கு வாழ்வை முழுதுமாய் வாழ்ந்த மனநிறைவுடன் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் நோக்கி நடை போட ஆரம்பித்தனர்.

ஹோட்டல் அறையினுள் நுழைந்த அவர்களிடம்,

"எங்கே போனீங்க ரெண்டு பேரும்? அம்மா, அப்பா கூட தெரியல னு சொல்லிட்டாங்க. எனக்கு விளையாட ஆளே இல்லை. சரி விடுங்க... வாங்க பார்க் போகலாம் "

என்ற நான்கு வயது பேத்தியை அணைத்தபடி, மீண்டும் நடந்தனர் பிரயன்ட் பார்க் வழியில்.

அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாய் எதிர்கொண்ட போராட்டங்கள், அனுபவித்த சந்தோஷங்கள், எதிர்பட்ட பிரச்சனைகள், நிறைவேற்றிய கடமைகள் அனைத்தும், அவர்கள் காதலை மெருகேற்றி இருந்தது. அன்று கொண்ட ஆனந்தத்தை விட இன்று மீண்டும் வாழ்ந்த அதே நொடிகள் உண்டாக்கிய நிறைவு மனம் முழுவதும் வாசம் பரப்பியது.

குறையொன்றுமில்லை...

"வாழ்த்துக்கள் ...பெண் குழந்தை " - தாய், தந்தை இருவருக்கும், உள்ளிற்குள் இனம் புரியா ஆனந்தம்."ஆசைக்குப் பொண்ணு " என்று சொல்வதுண்டு. உண்மை தான் போலும். குறையொன்றுமில்லை.

அவள் அம்மாவின் அரவணைப்பில் உலகை நோக்கினாள். அனைத்துமே சுகமாய், அமைதியாய் இருந்தது. அவ்வயதில், நல்லது கெட்டது ஆராயத் தெரியுமா என்ன? வீட்டில் அவளே செல்லம் ஆனாள். குறையொன்றுமில்லை.

பள்ளி முதல் நாள். அப்பா அழைத்துச் சென்று விட்ட பின், வகுப்பிற்குள் தனியாக நுழைந்தாள். உலகத்தை யார் துணையும் இல்லாமல், தனியாக எதிர் கொண்டதாய் ஓர் பெருமிதம். குறையொன்றுமில்லை.

ஒவ்வோர் வகுப்பையும் கடந்து மெல்ல முன்னேற்றம் கொண்டாள். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. சீராகவே சென்றது. திடீரென, தனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். ஆண், பெண் வேறுபாடு இது வரை உணரவில்லை. ஆனால் இப்போது அதுவே கண் முன் இருந்தது. ஏன் அப்படி? கேள்வி தனக்குள் மட்டுமே. தாயிடம் கேட்டால், மௌனமே பதிலாய் வந்தது. ஆம். பெண்மையின் வெளிப்பாடு. திகிலாய் உள்ளே தோன்றினும், அதுவே நிரந்தரம் என்பதால்,பழக்கம் கொண்டாள். குறையொன்றுமில்லை தான்.

மாற்றம், தனக்குள் மட்டுமில்லை. தன்னைக் காணும் உலகத்தின் பார்வையிலும் தான். முன்பு வீட்டில் காட்டிய செல்லம், தற்போது செல்லமாகத் தோன்றவில்லை. தடையாகவே தோன்றியது. தனியாகச் செல்ல அனுமதி இல்லை என்பதைக் காட்டிலும், பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. Ruchika போன்ற நிகழ்வுகள் செய்திகளில் வருகிறதே. தன் வயதை ஒத்த ஆண் பிள்ளைகள் இவ்விதக் குழப்பம் கொள்ளவில்லையே. கடவுளே
இதற்கு வித்திட்டாரோ? உலகம் தோண்றிய காலம் முதல் இப்படித் தான் போலும். அவ்விதமே அவளைச் சுற்றி இருந்த சமூகம் நம்ப வைத்தது. ஏற்றுக் கொண்டாள். இதைக் காரணமாய்க் கொண்டு, மனதில் நினைப்பதைச் செய்ய, அனுபவிக்க, ஐயம் கொண்டாள். பெண் என்றால் செய்யக் கூடியது , செய்யக் கூடாதது என இருக்கின்றன போலும். வாழ்க்கையில் மேலும் நிறைய உள்ளது. இதைத் தவரவிடின் குடி மூழ்கிப் போவதில்லை என சமாதானம் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

தன் பெயருக்குப் பின்னால், பட்டம் பெற்றாள். ஆணிற்குப் பெண் சமம் உண்மையாகி விட்டது. தானும் வேலைக்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி. தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலே இருந்த
அத்துணை குழப்பங்களும் தொடர்ந்தன தான். ஆனால், இவ்வொரு விஷயமே அனைத்தையும் ஆட்கொண்டன.அட. சமூகம் அப்படித் தான்..குறை ஒன்றுமில்லை


திருமண வயது. அப்பப்பா... எவ்வளவு ஆசையுடன் செய்கிறார்கள் பெற்றோர். எவ்வளவு நகை, சாமான், ஆரவாரம். அனைத்தும் தன் மேல் கொண்ட பாசத்தினால் தானே.
உற்சாகம் கொள்ளும் அதே நேரத்தில், கேள்விகளும் அதிகரித்ததே தவிர, குறையவில்லை. ஏன் இவ்வளவு ஆடம்பரமும் மணமகள் வீட்டார் மட்டும் செய்ய வேண்டும்? என்ன பயன்? ஏன் நான் என் வீட்டாரை விட்டுச் செல்ல வேண்டும்? நான் விற்கப் படுகிறேனா? அல்ல, மாப்பிள்ளை வாங்கப் படுகிறாரா? ஏன் இது இப்படியாக இருக்கிறது? புரியவில்லை தான். கேள்விகள், அவளைத் தாண்டி நகர்ந்தால், பதில் "அது அப்படித் தான்" . ஒத்துக் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான் மா...குறையொன்றுமில்லை.

புகுந்த வீடு சென்ற பின், அவளும் வேலைக்குச் சென்றாள். அவள் கணவனும் சென்றான். ஆயினும்,
வீட்டு வேலை செய்வது, அவளாகவே இருந்தது. ஏன்? சமூகமே அப்படித் தான். சரி தான். அப்படியானால், அதைத் தவிர , குறையொன்றுமில்லை.


பெண் வாழ்கையின் தவப்பலன். தாயானாள். சுற்றம் முழுவதும் அவளைக் கொண்டாடியது. தாங்க மாட்டா வலி கொண்டாள். இறந்து விடுவோமோ என அஞ்சும் அளவு வலி, துக்கம். குழந்தை பிறந்தது. பிறந்த பலனை அடைந்து விட்டாயிற்று. இது வரை மனதில் எழுந்த கேள்விகள் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்தன. இந்த ஒரு தாய்மை
உணர்விற்காகத் தான், இத்தனை தடைகளுமா அவளுக்கு? இதை அறிந்து தான், சமூகம் இவ்வளவு கோட்பாடுகளை வைத்துள்ளதா? அப்படியானால், குறையொன்றுமில்லை.

மீண்டும் அவள் பணி - வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்ந்தது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பும் உடன் சேர்ந்தது. தற்போது, இரண்டு வித வாழ்க்கை அவள் முன். அவை இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய அவளுக்கு சுதந்திரம் இருந்தது. ஒன்று, வேலையை விட்டு, வீட்டில் இருந்து அனைத்தையும் கவனிக்க வேண்டும். இல்லையேல், வீடு, அலுவல் என இரண்டையும் சமாளிக்க வேண்டும். அச்சோ. இரண்டிலுமே, வீட்டை கவனிக்கும் பொறுப்பு பெண்ணிற்குத் தானா? குழந்தை வளர்ப்பில் பெண் மட்டும் தான் ஈடுபட வேண்டுமா? அது ஏன்? பெண்ணால் மட்டுமே பொறுப்பாய், பாச மிகுதியாய் இருக்க முடியும். உண்மை தான் போலும். சமூகம் கூறினால், உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

அவள் மனதினுள் அவள் காணும் வெளி உலகத்திற்காய் , அவள் ஆசைப்பட்டவை என ஏதேனும் செய்ய நினைத்தால், நேரம் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. சமூகம் அதை ஒரு பொருட்டாய்க் கொள்ளவில்லை. அவளும் தான். ஆகையால், குறை ஏதும் உள்ளதென நினைக்கவில்லை.

சுமங்கலியாய் சென்று விட வேண்டும் என அனைவரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறாள். உணர்ந்தாள், கணவர் சென்ற பின். கணவர் வருவதற்கு முன்னமே, பூ, பொட்டு எல்லாம் வைத்திருந்தாள் . ஆயினும், இப்போது அது அவளிடம் இருக்கக் கூடாது என சுற்றம் கூறியது. எதிர் கேள்வி கேட்க மனம் இல்லை. அவள் இருப்பதையே, அமங்கலமாய்க் கருதியது. இது ஏன் பெண்ணிற்கு மட்டும் இப்படி? சும்மா இரு. சமூகம் அப்படித் தான். குறை ஒன்றும் இருக்கக் கூடாது.


இவை அனைத்தும் இருப்பினும், அவளிடம் சமூகம் கூறியது "இனிய மகளிர் தினம் " .

அது சரி. சமூகம் என்பது யாரானால் ஆனது? தானும் தானே என்பதை உணரும் சமயம், வாழ்க்கை அவள் கையில் இல்லை.

வெற்றிடம்

"டேய்... நேத்து ஸ்கூல் சீக்கரமே முடிஞ்சிதா? வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் என்ன பண்றது நு தெரியாம பக்கத்துல இருந்த மைதானத்துக்கு போலாம் னு தோணிச்சு. அம்மா கிட்ட சொன்னேன். அம்மாவும் சரி னு சொல்லிட்டாங்க. எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்ல டா"

"போனியா?"

"ஆமாம். போனோமே. அங்க குட்டி பசங்க விளையாட நிறைய இருக்கு. அம்மா கைய பிடிச்சி போனேன். சறுக்கு மரம் மட்டுமே நிறைய கலர் ல இருந்துது. எல்லாமே ஒரே மாதிரி தான். ஆனா எல்லாத்துலயும் மாறி மாறி குதிச்சிட்டு இருந்தேன். "

"சறுக்கு மரம் மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா அங்க?"

"ஏன் இல்ல? ஊஞ்சல் இருந்துது. அதுல நான் ஏறி உக்காந்தேன். அம்மாக்கு அத பாத்து ரொம்ப சந்தோஷம். பின்னாடி நின்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் மேல போய்ட்டு திரும்ப கீழ வரும் போது, பொறுமையா திரும்ப ஏத்தி விட்டாங்க. செம ஸ்பீடா தள்ளி விட்டாங்க. எனக்கு காத்துல மிதக்கறா மாதிரியே இருந்துது. "

"வேற என்ன விளையாடின? நீ சொல்ல சொல்ல எனக்கும் அப்டி எல்லாம் விளையாடனும் னு ஆசையா இருக்கு டா. ஆனா எப்போ, யார் கூட்டிட்டு போவாங்க னு தெரியலையே. நானும் எங்க அம்மா வ கேட்டு பாக்கறேன் ஒரு வாட்டி "

"சீசா இருந்துது டா. அதுவும் சூப்பர் தெரியுமா? நான் ஒரு பக்கம் உக்கார, அம்மா இன்னொரு பக்கம், கைய வெச்சி பேலன்ஸ் பண்ணாங்க... அது விளையாடும் போது, பக்கத்துல ஒரு தாத்தா "பலூன் பலூன்" னு கூவிட்டே போனாரு. அத பாத்த உடனே, விளையாட பிடிக்கல. பலூன் வாங்கணும் னு தோணிச்சு. அம்மா வ பாக்க மட்டும் தான் செஞ்சேன். வாய தெறந்து கேக்கவே இல்ல. அம்மா உடனே தாத்தா வ கூப்பிட்டு பலூன் வாங்கி தந்தாங்க. "

"என்ன கலர் பலூன்? எவ்ளோ பெரிசு?"

"ப்ளூ கலர். செம பெரிசு. அத தூக்கி போட்டு விளையாட ஆரம்பிச்சிட்டேன். "

" பலூன் தாத்தா முகம் ஞாபகம் இருக்கா?"

"இருக்கே. "

"பலூன் கலர் ஞாபகம் இருக்கு. தாத்தா முகம் ஞாபகம் இருக்கு. என்ன விளையாடின னு எல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா, உன்னை இங்க ஆசிரமம் ல விட்டுட்டுப் போன உங்க அம்மா முகம் மட்டும் எப்படி இருந்துது னு ஞாபகம் இல்லையா?"

"என்னை கேக்கற? நீயும் தான் அடிக்கடி உங்க அம்மா வ பாக்கற? முகம் ஞாபகம் இருக்கா என்ன? "

"அது சரி டா. நாம எல்லாத்தையும் கனவுலேயே பாக்கறோம். என்னிக்கு தான் நேர்ல பாத்து விளையாட போறோமோ. "

இருவரும் மற்றும் ஓர் கனவை எதிர்பார்த்து உறங்க முயற்சித்தனர்.

விழித்தேன்....

பார்வைக்கு எட்டாச் செல்வத்திற்காய்
நிதம் வாழ்வதேன்?
இன்றே நாம், நாமாய்
நாம் அறிந்தவர்க்காய் , நமக்காய்
வாழ்வதில் குற்றமென்?
தொலைநோக்குப் பார்வை அவசியம் தான்..
அதற்காய் இந்நொடியை அடகு வைப்பதில் பயனில்லை.

மாற்றம்

நன்மையும் நான்
தீமையும் நான்
உன்னில் நான்..
உன் வெளியில் நான்..
நான் இல்லாமல் நீயில்லை
நீ இருக்கும்வரை நான் மறைவதில்லை..
நீ இறந்தபின்னும் இறப்பதில்லை.
எவரிலும் நான்..
எதிலும் நான்..
உணரவில்லை நீ..
செய்வதறியாமல் பழித்தாய் மற்றவரை


நான் இருப்பதறிந்தும் பயனில்லை..
சினம் கொண்டாய்..
மற்றவரிடம் நான் அதிகமாய் இருப்பதாய் எண்ணம்.
உன்னில் இருக்கும் என்னிடம் பாரா முகம் ஏனோ.


எனை ஏற்க ஏன் மனமில்லை..
நான் மறைந்தால் என் செய்வாய்..
ஒரு நிமிடம் யோசித்தாயா..
அகிலமே அதிர்ந்து விடாதா...

நான் எப்போதும் எதிலும் உறைவதால் தான்
நீ நீயானாய்.
அவள் அவளானாள்.
அவன் அவனானான்.
அது அதுவானது..

அழியா
விசித்திரம் நான்.
எனை அகற்ற முயல்வதை மற..
மீறினால் விபரீதமே என்பதை ஒப்புக்கொள்.
வாழ்வுள்ளவரை நான் நிரந்தரம்.
அனுபவித்துப்பார் முழுமையாய்,
நானே உனை விலக முயலினும்
அணைத்துக் கொள்வாய் என்பதில் ஐயமில்லை..