Monday, April 9, 2012

If Only

வாரயிறுதியில் If only என்ற ஆங்கில படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பழைய படம் தான்.ஹீரோவிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கொண்ட ஹீரோயின்.அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ஹீரோ என அதிக நேரம் வாக்குவாதத்தில் முடிக்கும் ஜோடி.தன் சொந்த ஊருக்கு செல்லும் ஹீரோயின் ஹீரொவையும் உடன் அழைக்கிறாள்.வேலைக் காரணத்தால் செல்ல முடியாத ஹீரோ என மனஸ்தாபத்தில் முடிகிறது.ஹீரோவின் ஒரு கனவில் ஒரு நாள் நடக்கவிருக்கும் சம்பவம் அனைத்தும் நிழலாய் செல்கிறது.ஹீரோயின், விபத்தில் உயிர் பிறிவதும் அவளது டைரியை ஹீரோ படித்து தனிமையில் அழுவதுமாய்க் கனவு முடிகிறது.அதிர்ச்சியில் கண் விழிக்கும் ஹீரோ,அடுத்த நாள் காலை கனவில் நடந்த அனைத்தும் நிஜத்தில் நடப்பதை எண்ணி பதற்றம் கொள்கிறான்.அப்படியெனில் அன்றிரவு அவள் இறப்பாள் என்பதை ஏற்க முடியாத ஹீரோ, ஹீரோயினை காப்பாத்த முயல்கிறான்.இருப்பினும் அவளுடனான நாள் இறுதி நாளாக இருக்கும் என்ற அச்சத்தில் அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் உடன் நின்று செய்கிறான்.அவள் செல்ல விரும்பிய இடங்கள்,அவன் சொல்லி அவள் கேட்க விரும்பியவை என அனைத்தும் நிறைவேற்றுகிறான்.இறுதியில் அவளைக் காப்பாற்றினாரா ஹீரோ என்பதே க்ளைமாக்ஸ்.அதிகம் சென்டிமென்ட்ஸ்,நிதானமாகவே கதை நகர்கிறது.

இந்த படம் பிடித்ததா என்பதை விட சொல்லப்பட்ட கருத்து மனதிற்கு நெருக்கமானது.அதனாலே இந்தப் பதிவு எனலாம்.டைம் - மனிதனின் அப்பாற்பட்ட சக்திக்கு அவனிட்ட எளிய பெயர்.கண் இமைக்கும் நேரம் ஒரு நொடி என்று அறிவோம். ஆனால் அந்த ஒரு நொடி நமக்காக சுமந்து வரும் ஆச்சரியங்களை உணரும் சமயம், நேரம் கையிலெட்டா தூரத்தில் பறந்து விடுகிறது. இதில் உறவுகளின் விருப்பு வெறுப்புகளை எளிதில் நேரத்துடனே சேர்த்து தொலைத்தும் விடுகிறோம்.ஒரு நண்பன்.எப்போதும் உடனிருப்பவன் தான்.என்றாவது அவன் ஏதோ பேச முயற்சி செய்கையில் வேலை மும்முரத்தில் பெரிதாய் எடுக்காமல் புறக்கணித்து முன்னே செல்கிறோம்.நாம் பேச நினைக்கும் சமயம் அவன் உடனில்லை என்றால் எப்படி எடுப்போம்.அவன் என்ன சொல்ல நினைத்தான் என்பதை உணரும்முன்னே அவன் பிரிந்து விடுகிறான். அவன் பேச விரும்பிய சமயம் காது கொடுத்திருந்தால் ஒரு வேளை அவன் உடனிருந்திருப்பானோ . தெரிய வாய்ப்பில்லை.

படத்தில் இருந்ததைப் போல்,ட்ரெயிலருடன் வாழ்க்கை நடக்கவிருப்பதை நமக்கு விளக்குவதில்லை.தொலைத்த நொடிகள் திரும்பவும் வருவதில்லை.அடுத்த நாள் நாமோ,நமக்கு நெருக்கமானவர்களோ உலகில் எந்த மூலையில் இருப்போம் என்பது நேரம் மட்டுமே அறிந்த ரகசியம்.அலைப்பேசி,இணையம் என உலகம் சுருங்கி விட்டதாய் பொய் சமாதானம் சொல்லி உடனிருக்கும் உறவுகளை மறைத்தும் மறந்தும் வாழ்கிறோம்.அருகில் இருப்பவரை உதாசீனப்படுத்தி,தொலைவில் சென்றபின் மிஸ் யூ எனச் சொல்லி உறவின் பெருமையை பேசுவதில் என்ன சாதிக்கிறோம்.உறவின் அர்த்தத்தை உணர்கிறோமேயன்றி அதன் ஆழத்தை வாழ மறக்கிறோம்.

என்றோ, எப்போதோ எடுத்த போட்டோ ஆல்பம் பார்க்கையில், அதிலிருக்கும் சிலர் நம்மிடையே இருப்பதில்லை என்பதை வருந்துவோர் உண்டு. ஆனால், அந்த மனிதர் உடன் இருந்த சமயம், அவரிடம் சரியாகப் பழகினோமா என்பதை நினைப்பதுமில்லை. அதை வேறொருவருக்கு செய்கிறோமா என்று யோசித்து மாறுவதுமில்லை. போட்டி, முன்னேற்றமென டைம் மிஷினைத் தோற்கடிக்கும் மிஷின்களாய் வாழ்க்கையை புலம்பல்களிடையே நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.இறுதியில் எதை அடைகிறோமோ இல்லையோ, இழந்தவை மட்டும் மனதை வாட்டும் என்பதில் ஐயமில்லை.

Life is all about moments and memories. Moments are to be lived to have a life filled with Memories! Just Live it! :)